Sunday, May 21, 2023

வாசிப்பு மனிதனை மனிதனாக மாற்றும்!..

 

வாசிப்பு ஒருவனைப் பூரண மனிதனாக்குகிறது என்பது அறிஞர் வாக்கு. வாசிப்பு என்பது வெறும் புத்தகங்களை மட்டும் கற்பதல்ல.   நூல்கள் மனிதனின் சிறந்த நண்பன்.   வாசிப்பு இல்லாமல் கற்றல் எனும் செயற்பாடே நிறைவு பெறாது.




பேரறிஞர்கள் பலர் தம் வாசிப்புப் பழக்கத்தினாலேயே வாழ்வில் உயர்வடைந்தனர். வாசிப்புப் பழக்கம் ஒருவனது உளநலத்தையும் உடல்நலத்தையும் மட்டுமன்றி ஆன்மீக நலத்தையும் பேண வழிவகுக்கிறது. ஒரு சிறந்த வாசகனால் மட்டுமே சிறந்த எழுத்தாளனாக  முடியும். ஒரு சிறந்த எழுத்தாளறினால் மட்டுமே சிறந்த பேச்சாளறாக முடியும். மேலும் அறிவைப்பெற, மன அமைதிபெற, புதிய தகவல்களை அறிந்து கொள்ள வாசிப்புப் பழக்கம் பெரிதும் உதவுகிறது. ஆகவே மனித தொடர்பாடலின் மையப்புள்ளியே வாசிப்பு ஆகும்.

 

இன்று வாசிப்புப் பழக்கம் முற்றாக அழிந்து வருகிறது. Smart Phones, Tabs, Computers, Laptops, தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்கள் இவற்றைப் பயன்படுத்துவதிலேயே மக்களின் கவனம் திரும்பியுள்ளது. கிராமங்களிலும் குடிசைகளிலும் இவற்றின் ஆதிக்கம் இன்று பெருகியுள்ளது. இதன் காரணமாக நூல்கள், சஞ்சிகைகளை வாசிக்கும் பழக்கம் மக்களிடையே பாரியஅளவில் குறைந்து வருவதைக் காணமுடிகிறது. எவன் ஒருவன் வாசிக்காதவனாக இருக்கிறானோ அவன்   மனதில், அறிவில், அறியாமை இருள் படிந்திருக்கும். வாசிப்பு என்பது ஒரு மனிதனின் குழப்பமான மனநிலையை அகற்றி நன்னிலைப்படுத்த உதவுகிறது. இதேபோன்று புதிய  விடயங்கள் மனதில் இடம்பிடித்துக் கொள்வதற்குரிய சந்தர்ப்பத்தை வாசிப்பு ஏற்படுத்துகிறது.

 

மேலும், நல்ல நூல்கள் எமக்கு சிறந்த வழிகாட்டியாக  அரவணைக்கும் தாயாக, தைரியமூட்டும் தந்தையாக கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நண்பனாக பல்வேறு பாத்திரங்களை வகிக்கின்றது.

“கண்டது கற்கட் பண்டிதனாவான்

என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். காணும் நூல்களையெல்லாம் கற்பதன் மூலம் ஒருவனது அறிவு பன்மடங்கு பெருகும் என்ற கருத்தையே இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

"ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை  மூடப்படுகிறது!"

என்று வீவேகானந்தர் கூறியுள்ளார். உலகில்  தோன்றிய எல்லாத் தலைவர்களும் வாசிப்பதன்  மூலம் தம்மை முழுமைப்படுத்திக் கொண்டவர்களாவார்கள்.

 

 

‘ஒருகோடி ரூபாய்  கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன்!? என ‘மகாத்மா காந்தி’ கூறியுள்ளார். இதே போன்றுதான், உலகின் தலைச்சிறந்த  தத்துவ ஞானியான சோக்ரடீஸ்’ தனக்கு நஞ்சூட்டப்படும் வரை வாசித்துக் கொண்டு இருந்தார் என்று வரலாறுகள் கூறுகின்றது. வாசிப்பதன் மூலம் ஒருவனது மொழித்திறன் விருத்தி, சொல்வான்மை, பொது அறிவு வளர்ச்சி, தன்னம்பிக்கை, ஆளுமை விருத்தி, ஞாபகசக்தி, அதிகரிப்பு, கிரகித்தல் என்பன எம்முன் வளர்கிறது.

 

வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளப் பல உத்திகளைக் கையாளுகிறார்கள். புத்தகக் கண்காட்சி நடத்துதல், ‘வாசிப்பு மாத’ நிகழ்ச்சிகளை நடத்துதல். நூலக தினம் கொண்டாடுதல் போன்றவைகள்  அவற்றுட் சிலவாகும். நூலகங்கள் நம் அறிவை வளர்த்திடும் அரும் பொக்கிஷங்கள். அங்கு தினந்தோறும் சென்று நாம் விரும்பிடும் நூல்களைப் பெற்று வாசிக்க முடியும். நூலகங்களில் காலத்துக்குக் காலம் வெளிவரும் புத்தம் புதிய நூல்களை நாம் காணமுடியும்.

 

பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தலில் பெற்றோர்கள் பெரும்பங்கு வகித்திட வேண்டும். இளமை முதல் நல்ல நூல்களைப் படிக்குமாறு பிள்ளைகளுக்குப் பெற்றோர் அறிவுரை கூற வேண்டும். நல்ல நூல்கள் பலவற்றை வாங்கித் தம் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும். தாமும் ஓய்வு நேரங்களில் நூல்களை வாசிப்பதன மூலம் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக விளங்கவேண்டும். பெற்றோர்கள் வாசிப்புப் பழக்கம் உடையவர்களாயிருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் பின்பற்றுவர்.  எனவே பெற்றோர் தாம் நூல்களைப் பெற்று வாசிக்கும் பழக்கமுடையவர்களாக இருப்பதோடு பிள்ளைகளையும் வாசிக்கும்படி தூண்டுதல் அளிக்கவேண்டும்.

 

எனவே, ஆளுமைமிக்க இளம் சந்ததியினரை உருவாக்க வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடத்தில் வளர்த்திட வேண்டும். ஆகவே வாசிப்பு மனிதனை மனிதனாக மாற்றும்

 

நன்றி

No comments:

Post a Comment