Stamps reading - Vincent van Gogh – முத்திரை வாசிப்பு - வின்செண்ட் வான் கோ
மனிதனின் வாழ்நாளில் இன்னல்களையும், சிரமங்களையும் சந்திக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்னல்களையும், துன்பங்களையும் தாண்டி வெற்றி பெறுபவர்களை தான் வரலாறும் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது.
கஷ்டங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தால் பரவாயில்லை ஆனால் கஷ்டமே வாழ்க்கையாக இருந்தால் எப்படியிருக்கும்? நாம் பார்க்க இருக்கும் வரலாற்று நாயகர் அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவர். அவர் வாழ்ந்தபோது அவரது திறமையை துச்சமாக, மதித்த உலகம் அவர் மறைந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு அவரது திறமையை மற்ற கலைஞர்களுக்கு அளவுகோலாக பயன்படுத்துகிறது. இப்போது அவரது படைப்புகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றனர் . அவர்தான் ‘Expressionism’ என்ற ஓவிய, கலை பணியை உலகுக்கு அறிமுகம் செய்த பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியர் வின்செண்ட் வான் கோ (Vincent Van Gogh). இவர் 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் Groot-Zundert-ல் பிறந்தார்.
பல வரலாற்று பிரபல்யங்கள் போல அவரும் ஏழ்மையில்தான் பிறந்தார். அவர் பிறப்பதற்கு முன்பே அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கி இருந்தது. சரியாக ஓரு வருடத்துக்கு முன்னர் அதே திகதியில் பிறந்த அவரது அண்ணன் சில வாரங்களில் இறந்து போனதுதான் அந்த சோகத்திற்கு காரணம். அந்த மரணத்திற்கு பின் பிறந்ததால் அண்ணனுக்கு வைத்த பெயரையே பெற்றோர் அவருக்கும் வைத்தனர். அவருக்கு விபரம் தெரிய வரும் போது ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்பட ஆரம்பித்தது.
அண்ணன் பெயரை தாங்கியிருக்கிறோம் என்ற நினைப்பு அதற்கு காரணமாயிருந்தது. வான் கோவின் தந்தை ஒரு மதபோதகராக இருந்தார் அதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை. தாழ்வு மனப்பான்மையும், குடும்ப வறுமையும் வான் கோவை முன்கோவக்காரணக , முரடனாகவும் மாற்றியது. தேவலாயத்தில் உபதேசம் செய்யும் தந்தையால்கூட வான் கோவை அடக்க முடியாமல் போனது.
வான் கோவிற்கு 16 வயதானபோது அவரது பெற்றோர் தொலைவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவருக்கு படிப்பின் மீது விருப்பம் இல்லை. எனவே அவரை வெளியூரில் ஓவியக்கூடம் நடத்தி வந்த உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்றபோதுதான் அவருக்கு ஓவியங்கள் மீது விருப்பம் ஏற்பட்டது. இருந்தாலும் அவரை அரித்து வந்த தாழ்வு மனப்பான்மை மனச்சோர்வாக மாறத்தொடங்கியது. அதனால் வாழ்க்கையில் என்ன செய்வது? என்று தெரியாமல் பலமுறை குழம்பினார் வான் கோ. தந்தையைபோல எளிமையாக மதபோதகர் ஆகலாமா என்றுகூட அவர் யோசித்தார். சுமார் ஒரு வருடம் Wasmes என்ற நிலக்கரி சுரங்க ஊழியர்களின் கிராமத்தில் அவர் மதபோதனையில் ஈடுபட்டு தன்னைத்தானே வருத்திக்கொண்டு கடும் துறவு வாழ்க்கையை வாழ்ந்தார் . அவரது போதனை முறைகளை ஏற்காத தேவாலாயம் அவரது பதவியை பறித்தது.
பெற்றோரின் அன்பும், உடன் பிறந்தவர்களின் அன்பும் இல்லாமல் வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாத அந்த சமயத்தில் அவர் பிழைப்புக்காக லண்டனுக்கு சென்றார். அன்புக்காக ஏங்கியதாலோ என்னவோ தாம் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் பெண்ணை நேசிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது காதலை அந்த பெண் ஏற்றுக்கொள்ள மறுக்கவே அவரது சோகமும், மனச்சோர்வும் அதிகமானது. அவரது கவனம் விலைமாதர்களின் பக்கம் திரும்பியது. தனக்கென ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என விரும்பிய அவர் அவர்களில் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். ஆனால் இல்லற வாழ்க்கை அவருக்கு கொடுமையானதாக அமைந்தது. பல ஆண்டுகள் பொருத்த அவர் கடைசியில் மணமுறிவு செய்துகொண்டார்.
33 வயதில் மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டு ஓர் ஓவியனாகலாம் என்று முடிவெடுத்தார். அப்போதும் அவருடன் கூடவே இருந்தது வறுமை மட்டும்.சகோதரன் அவ்வபோது கொடுத்த பணத்தைக் கொண்டு காலத்தை ஓட்டியவர் வான் கோ. வண்ணமும் தூரிகையும் வாங்குவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை இருந்தும் ஓவியங்கள் வரையத்தொடங்கினார். தன் கவனம் முழுவதையும் ஓவியங்கள் மீது பதித்தார். ஆதிகால குகை ஓவியங்கள், Gatwick ஓவியங்கள். Renaissance ஓவியங்கள், Impressionism ஓவியங்கள் இதுதான் ஓவியங்களின் பரினாமங்களாக இருந்தது. அதில் ஒரு புதிய பரினாமத்தை ஏற்படுத்தினார் வான் கோ. ‘Expressionism’ என்ற புதியபணியை அவர் தன் ஓவியங்களில் அறிமுகம் செய்தார். அவருடைய ஓவியங்கள் பளிச்சென்று வண்ணமயமாக இருந்தது. அவர் வரைந்த சூரியகாந்தி பூ ஓவியம் உலகப்புகழ் பெற்றது.
வான் கோவின் கடைசி ஆறு ஆண்டுகளில் சுமார் 700 ஸ்கெட்ச் ஓவியங்களையும், 800 Oil Paintings எனப்படும் எண்ணெய் ஓவியங்களையும் வரைந்தார். ஆனால் சோகம் என்னவென்றால் எவ்வளவு நிறைய ஓவியங்கள் வரைந்தாலும் ஒரே ஒரு ஓவியத்தைதான் அவரால் விற்க முடிந்தது. அதுவும் வீட்டு வாடகை கடனுக்காக அந்த ஓவியத்தை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார் என்று வரலாற்றுக்குறிப்புக்கள் கூறுகிறது. அவரது ஓவியங்களை உலகம் கண்டுகொள்ளாததற்கு அவரது மனச்சோர்வு ஒரு காரணமாக இருந்திருக்க காரணமாக இருக்கலாம். ஒருமுறை மனச்சோர்வு முற்றியபோது அவர் என்ன செய்தார் தெரியுமா? கத்தியை எடுத்து தனது ஒரு காதை அறுத்துக்கொண்டார். விசித்திரமாக இருந்தாலும் உண்மை. மனச்சோர்வால் எவ்வுளவு ஆழமாக பாதிக்கப்பட்டிருந்தால் அவர் அந்த காரியத்தை செய்திருப்பார். பின்னாளில் காதில் கட்டுபோட்ட மாதிரி தமது உருவத்தையே வரைந்தார் வான் கோ.
அவரது மனச்சோர்வு அதிகரித்து மருத்துவமணைக்கு போவதும் வருவதுமாக இருந்தார் அவர். வாழ்க்கை முழுவதும் சோகத்திலேயே வாழ்ந்த அவர் 1890 ஆம் ஆண்டு சோகமான முறையில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். அந்த ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டார். இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அவரது உயிர் பிரிந்தது. வாழ்ந்தபோது அவரது படைப்புகளை மதிக்காத உலகம் அவர் இறந்த பிறகு அவற்றை விலை மதிக்க முடியாதவை என்று கூறுகிறது. 1990-ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற critics ஓவிய ஏலத்தில் வான் கோவின் ‘Portrait of Dr. Gache’ என்ற ஓவியம் $100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. உலகின் செல்வந்தர்களும், புராதன ஓவியங்களை சேகரிப்பவர்களும் வான் கோ பூர்த்தி செய்யாமல் விட்டுப்போன ஓவியங்களுக்குகூட பல மில்லியன் டாலர் கொடுக்க போட்டி போடுகின்றனர்.
மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களால்கூட உலகை வெல்லும் படைப்புகளை தர முடியும் என்பதுதான் வான் கோவின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம்.
நாம் நமது குறைகளை நினைத்து சரிந்து விழாமல் நிறைகளை நினைத்து நிமிர்ந்து நின்றால் நம்மாலும் விளக்கில் எரியும் நெருப்பாக நிமிர்ந்து எரிய முடியும். வாழும்போதுதான் வானம் வசப்பட வேண்டும் என்று இல்லை மறைந்த பிறகும் வரலாறு நம்மை நினைத்துப்பார்த்தால் அதுவே வானம் வசப்பட்டதற்கு சமமாகும்..
எனவே இவரின் நினைவையோட்டி “வான் கோக் இன் ஸ்ரீலங்கா – VAN GOGH In Sri Lanka” என்ற தலைப்பில் இந்த கலைஞரின் மாதிரி ஓவியங்கள் நாரஹேன்பிட்டி, கிருல வீதியில் அமைந்துள்ள ஸ்கை கேலரி ஸ்டுடியோவில், 2023 மே 11 முதல் 21 வரை காலை 10 மணி முதல் மாலை வரை. 5 வரை இலவச கண்காட்சி ஒன்று ஏற்படு செய்துள்ளனர் (නාරාහේන්පිට, කිරුල පාරේ පිහිටි Sky Gallery චිත්රාගාරයේදී මේ අපුර්ව කලාකරුවගේ ආදර්ශ සිතුවම් ‘Van Gogh In Sri Lanka’ නමින් 2023 මැයි 11 සිට 21 දක්වා පෙ.ව. 10 සිට ප.ව. 5 දක්වා නොමිලයේ ප්රදර්ශනය කෙරේ.) என்பதும் குறிப்பிடத்தக்காது.
SKY ගැලරිය: 65/9, කිරුළ පාර, කොළඹ 5. අමතන්න: 0777329596.
No comments:
Post a Comment