குரல் ஓர் பரிசு ||VOICE IS A GIFT
பிறந்தது முதல் அழுகையில் ஆரம்பித்து, இறுதி மூச்சின் முனங்கள் வரை குரல் எழுப்பும் குரல்வளையானது மனித உடலின் ஒரு மகத்துவமான அமைப்பாகும். வெளிச்சுவாசத்தால் வெளிவிடப்படும் வளியானது குரல்வளையை நோக்கி வரும் சந்தர்ப்பத்தில் குரல்வளையில் இருக்கும் குரல்நாண்கள் அருகில் கொண்டு வரப்படும். இதன் போது குரல்நாண்களுக்கு கீழ்ப்பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும். அழுத்த வேறுபாடு காரணமாக குரல்நாண்கள் அதிர்வுக்குள்ளாகி ஓர் ஒலியை உற்பத்தி செய்யும். ஆங்கிலத்தில் இந்த ஒலியை நாம் Buzzing sound என்கிறோம். வாய்க்குழி மற்றும் மூக்குக்குழி மூலம், அதாவது பல், உதடு, நாக்கு, அன்னம் போன்றவற்றின் உதவியுடன் இந்த ஒலியானது முறையாக்கப்பட்டு எமது குரலாக வெளிப்படுகிறது.
குரல்வளை வெளிக்காற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால் தொற்றும் நோய்க்கூட்டம் எளிதாக குரலைச் சிதைத்து விடுகிறது. அத்தோடு தொண்டைத் தொற்றுகள் குரல்வளையைப்பாதித்து அதன் உட்சதையை வீங்க வைத்துவிடும். இரைப்பையின் அமிலத்தை எதுக்களித்து மேலே அனுப்பும் நிலையிலோ அல்லது உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தின் வால்வு சீராக இல்லாமல் போய் அதனால் அமிலத் தாக்குதல் உண்டாவதாலோ குரல் கெட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம். குரலை முறையற்று பயன்படுத்தினாலும் அளவுக்கு அதிகமாகச் சத்தம் போட்டாலும் குரல்நாணுக்கு ஆபத்து. இப்படிச் செய்வதால் குரல்நாணில் சிறுசிறு கட்டிகளை உண்டாக்கிவிடும் அபாயத்தையுடையது.
குரலிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள தொழில்களில் ஈடுபடுவோராக ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பாடகர்கள், நடிகர்கள், அறிவிப்பாளர்கள், இரசாயனத்துறையில் தொழில் புரிவோர் போன்றோர் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கான காரணங்களாக குரலை அதிகம் உபயோகித்தல், இரசாயனப் பதார்த்தங்களை நகர்தல், குரல் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காமை, பிழையான உணவுப்பழக்கவழக்கங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
குரலை அதிகமாகவும் பிழையான
முறையிலும் உபயோகிப்பதால்:-
1 குரல் நாண்களில் சிறு கட்டிகள் (Nodules ]
2 குரல் நாண்களில் கட்டிகள் (Polyps ]
3 குரல் நாண்களில் காயங்கள் [Contactulcers]
5 குரல்வளை அழற்சி (Laryngitis ) போன்ற நோய் நிலைமைகள் ஏற்படலாம்.
இதற்கான அறிகுறிகளாவன:-
* குரல் தடிப்பமாதல்.
* அசாதாரண சுவாசத்துடன் ஏற்படும் குரல் மாற்றம்.
* தொண்டையில் ஏதோ சிக்கிய உணர்வு
* தொண்டை வலி மற்றும் அழற்சி
* காலையில் நன்றாக இருந்த குரல் மாலையில் மாற்றமடைதல்.
* கதைக்கும் போது களைப்படைதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மேற்கூறப்பட்ட நோய் அறிகுறிகள் தென்படுமாயின்:
* காது,மூக்கு,தொண்டை தொடர்பான வைத்திய நிபுணர் ஒருவரை சந்தியுங்கள். [ENT Surgeon]
* பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளர் ஒருவரை சந்தியுங்கள். [ Speech and Language Therapist/ Pathologist ]
குரலை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் செய்ய வேண்டியவை:-
1. நீண்ட நாட்களுக்கு சளிப்பிரச்சினை காணப்படுமாயின் அதற்கான சிகிச்சையைப்பெறல்.
2. குரலை நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டியிருப்பின் சிறிது ஓய்வெடுத்துக் கதைத்தல்.
3. உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளல்.
4. இரைப்பை அழற்சி ஏற்படின் அதற்கான சிகிச்சையை பெறல்.
5. குரலை நீண்ட நேரம் பாவிக்கும் போது தொண்டையை ஈரலிப்புடன் வைத்திருத்தல்.
6. அடிக்கடி நீர் அருந்துதல்.
செய்யக்கூடாதவை:-
1. அடிக்கடி தொண்டையை கனைத்தல்.
2. புகைத்தல், மது அருந்துதல்.
3. குரலை பிழையான முறையில் உபயோகித்தல் - இரகசியம் கதைத்தல்
4. ஒழுங்கான பயிற்சியின்றி பாடுதல்
எனவே நாம் குரல் சுகாதாரத்தை பேணுவோம். இறைவன் நமக்கு அளித்த மிக அற்புதமான குரலை பாதுகாப்போம்.
No comments:
Post a Comment